கலவரத்தில் நேபாளம் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிக்கி இருக்கும் தமிழர்கள் கோரிக்கை
சென்னை: ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது. இந்த நிலையில் நேபாளத்திற்கு சுற்றுலா மற்றும் யாத்திரை சென்ற தமிழர்கள் பலர் அங்கு சிக்கி உள்ளனர். அங்கு கலநிலவரம் குறித்து தமிழகத்தை சேர்ந்த பிரவீன் கூறியதாவது: பணிக்காக நேபாளத்திற்கு வந்தேன் ஆனால் போராட்டத்தின் காரணமாக இங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு உள்ளதால் கடைகள் உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது. நான் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து வெளியில் வர முடியாத நிலை தான் தற்போது உள்ளது. அமைதி கொண்டு வருவதற்கு போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான் சுற்றுலாப் பயணிகள் அதிகம் இருக்கும் இடத்தில் தங்கி இருக்கிறேன். இங்கு இந்தியர்கள் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் தங்கி இருக்கிறார்கள். எனவே விடுதியில் தரும் உணவை மட்டுமே உட்கொள்ளும் நிலை உள்ளது. வெளியில் செல்வதற்கான வாய்ப்பும், அங்கு சாப்பிடுவதற்கான வாய்ப்பும் தற்போதுக்கு இல்லை. செல்போன் டவர் சீராக உள்ளது வீட்டில் இருக்கிறது குடும்பத்துடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். மருத்துவமனைகளும் சீரான நிலையில் உள்ளது. விரைவில் அமைதி திரும்பி விமான நிலையம் திறக்க வேண்டும். இல்லை என்றால் இந்திய அரசு தான் உதவி செய்ய வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து கைலாச யாத்திரை சென்று 18 தமிழர்கள் சிக்கி உள்ளனர். அதில் ஒருவர் கூறியதாவது: நாங்கள் 18 பேர் சீனா எல்லையில் உள்ள இடத்திற்கு கைலாச யாத்திரை வந்தோம். நேபாளத்தில் கலவரம் என்பதால்மீண்டும் நாட்டிற்கு திரும்ப முடியவில்லை. நாங்கள் இருக்கும் பகுதியில் வானிலை சீராக இல்லை பல்வேறு நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 200 பேர் யாத்திரை வந்தவர்கள் சிக்கி உள்ளோம். தங்குவதற்கு இடம் இல்லை, உணவுக்கு இடம் இல்லை மிகவும் கடினமாக உள்ளது. எனவே விரைவில் எங்களை காப்பாற்றி, மீட்டு தாய் நாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.