இம்பால்: கலவரம் மூண்டு 862 நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாளை மணிப்பூர் வருகை தரவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இரண்டு இனக்குழுக்களிடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறிய நிலையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்தார். தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் தொடர்ந்து 862 நாட்களாக அசாதாரண சூழல் நிலவியபோதும் பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு வருகை தரவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மணிப்பூர் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையொட்டி இம்பால் மற்றும் சூரசந்த்பூர் மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இம்பாலில் கிட்டத்தட்ட 237 ஏக்கர் பரப்பளவு கொண்ட காங்லா கோட்டைக்கு உள்ளேயும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், சூரசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடக்கும் இடங்களிலும் மாநில மற்றும் மத்திய படை வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மைதானத்திற்கு செல்லும் வழியில் காவல்துறை மற்றும் துணை ராணுவ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்எப் முகாமில் இருந்து அமைதி மைதானம் வரை சாலையின் இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சாலை முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அமைதி மைதானத்தில் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் பல ஆயத்த கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சஞ்செந்தோங், மினுதோங் மற்றும் மொய்ராங்கோம் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.