Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பணக்கார ஆண்களை குறிவைத்து தில்லாலங்கடி திருமண மோசடி வழக்கில் தந்தை தாய், மகன், 2 மகள்கள் கைது: பலரது வாழ்க்கையில் விளையாடியது அம்பலம்

குருகிராம்: ராஜஸ்தானில் பலரைத் திருமணம் செய்து நகை, பணத்துடன் தப்பிச் சென்ற மோசடிக் கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவர், ஓராண்டு தலைமறைவுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த தாராசந்த் ஜாட் என்பவரை, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பகத்சிங் சந்தித்துள்ளார். அப்போது, தனது மகள்களான காஜல் மற்றும் தமன்னா ஆகியோரை, தாராசந்தின் மகன்களான பன்வர்லால் மற்றும் சங்கர்லால் ஆகியோருக்குத் திருமணம் செய்து வைப்பதாக பகத்சிங் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய தாராசந்திடம் இருந்து திருமண ஏற்பாடுகள் செய்வதாகக் கூறி ரூ.11 லட்சத்தை பகத்சிங் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு மே 21-ஆம் தேதி, பகத்சிங் தனது மனைவி சரோஜ், மகன் சூரஜ் மற்றும் இரு மகள்களுடன் விருந்தினர் மாளிகைக்கு வந்து, தாராசந்தின் மகன்களுக்குத் தனது மகள்களைத் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு இரண்டு நாட்கள் மாப்பிள்ளை வீட்டில் தங்கியிருந்த பகத்சிங்கின் குடும்பத்தினர், மூன்றாவது நாளில் வீட்டில் இருந்த நகைகள், பணம் மற்றும் துணிகளுடன் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தாராசந்த், தந்தாராம்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், கடந்த டிசம்பர் 18ம் தேதி பகத்சிங் மற்றும் அவரது மனைவி சரோஜை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மோசடி திருமணக் கும்பலை நடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர், தமன்னா மற்றும் சூரஜையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், இந்தக் கும்பலின் முக்கிய குற்றவாளியான காஜல் மட்டும் ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். ஜெய்ப்பூர் மற்றும் மதுராவில் சில காலம் தங்கியிருந்த அவர், பின்னர் குருகிராமுக்கு வந்து சரஸ்வதி என்கிளேவ் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், சிகார் காவல்துறையினர், குருகிராம் காவல்துறையினரின் உதவியுடன் நேற்று காஜலைக் கைது செய்தனர். போலீஸ் விசாரணையின்போது காஜல் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது தந்தை பகத்சிங் திருமண மோசடி திட்டத்தை உருவாக்கினார். பணக்கார குடும்பங்களை குறிவைத்து நானும், தமன்னாவும் திருமணம் செய்துகொள்வோம். திருமணத்தின் மூலம் அவர்களின் நம்பிக்கையை எளிதில் பெறுவதால், இந்த வியாபாரத்தில் எங்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

மேலும், விசாரணை அதிகாரி பூரன்மால் கூறுகையில், ‘இவர்கள் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தங்குவார்கள்; அந்த நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபட மாட்டார்கள். இந்தக் கும்பல் இதேபோன்று பலரை ஏமாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தற்போது இந்தக் கும்பலின் மற்ற கூட்டாளிகள் மற்றும் அவர்களது ெதாடர்பாளர்களை தேடி வருகிறோம்’ என்றார்.