எதிர்மறை விமர்சனங்கள் வெறும் கூச்சலே... எனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தது என் உரிமை: நடிகை சோனாக்ஷி சின்ஹா பதிலடி
மும்பை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, கடந்த ஜூன் மாதம் நடிகர் ஜாகீர் இக்பாலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் இவர்களது திருமணம் நடைபெற்றது. அப்போது சமூக வலைதளங்களில் இவர்களது திருமணத்திற்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மதம் மாறுவது குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நெட்டிசன்கள் பலரும் மோசமான கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், அந்தச் சமயத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமெண்ட் பகுதியையே சோனாக்ஷி முடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனாக்ஷி சின்ஹா, தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அப்போது அவர், ‘என் திருமணம் குறித்து எழுந்த விமர்சனங்கள் அனைத்தும் வெறும் கூச்சல் மட்டுமே; இதுபற்றி நான் கவலைப்படவில்லை’ என்று கூறினார். மேலும், ‘மாற்று மதத்தில் திருமணம் செய்துகொண்ட முதல் பெண் நானல்ல, கடைசிப் பெண்ணும் நானல்ல. நான் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை, என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை கொண்ட முதிர்ச்சியான பெண் நான்; முன்பின் தெரியாதவர்கள் கூறும் கருத்துகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தரத் தேவையில்லை. எது நடந்தாலும் இறுதியில் அன்பு மட்டுமே ஜெயிக்கும்’ என்று நெத்தியடியாகப் பதிலளித்துள்ளார்.


