வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் எஸ்.ஐ.ஆர். புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு: இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். கால அவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து, நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, வருவாய்த்துறை அலுவலர் சங்கங்கள் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.
போதுமான கால அவகாசம் வேண்டும் என பெரும்பாலான கட்சிகள் கேட்டுக்கொண்டும் தேர்தல் ஆணையம் பிடிவாதமாக தனது நடவடிக்கையை தொடங்கியது. அது நடைமுறையில் நெருக்கடிகளை அதிகரித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை போராட்ட களத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறையை கைவிட்டு, வழக்கமான சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஆணையத்தை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


