Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் எதிரொலி தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் பாதிக்கும் அபாயம்: பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினரும் போராட்டம்

சென்னை: பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். அதேநேரம் வருவாய்த்துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சியில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18ம் தேதி (நேற்று) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும், 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.

2002ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும், 1.4.2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

சென்னையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் போராட்டம் நடந்தது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரித்து இருந்தார். ஆனாலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர்.

இதனால் அலுவல் பணிகள் ஓரளவு பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால், சென்னை தலைமை செயலகத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. 99 சதவீதம் பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். அதேபோன்று, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR - Special Intensive Revision) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் நடைபெறும் இந்த எஸ்ஐஆர் பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் முதல் வருவாய் துறை ஊழியர்கள், உள்ளாட்சி ஊழியர்கள் வரை ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த எஸ்ஐஆர் பணிகள் மிகுந்த அழுத்தத்துடன் நடைபெற்று வருவதாகவும், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அரசு ஊழியர் சங்கங்கள் பல நாட்களாகவே கூறி வருகின்றன. இந்த பணிகளை தினமும் பகல், இரவு என தொடர்ந்து செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணித்து நேற்று முதல் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான வாக்காளர் பட்டியல் திருத்தம் எந்த நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும், இந்த பணிகள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அவசர கடமைகளில் ஒன்றாகும்.

எஸ்ஐஆர் பணிகளை புறக்கணித்து விடுமுறை எடுத்தாலோ அல்லது வேலைநிறுத்தம் செய்தாலோ, அந்த அரசு ஊழியர்கள் தங்களது நாள் ஊதியத்தை இழக்க வேண்டியிருக்கும். பணியில் இருந்து விலகுவோர் ‘No Work No Pay’ என்ற விதிப்படி சம்பளம் பெற முடியாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று எச்சரித்து இருந்தார். இதையும் மீறி, வருவாய்த்துறை அதிகாரிகள் எஸ்ஐஆர் பணிகளை நேற்று முதல் புறக்கணித்துள்ளதால் எஸ்ஐஆர் பணிகள் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எஸ்ஐஆர் பணியில் வருவாய்த்துறை ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர்.

* எஸ்ஐஆர் பணிகள் மிகுந்த அழுத்தத்துடன் நடைபெற்று வருவதாகவும், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அரசு ஊழியர் சங்கங்கள் பல நாட்களாகவே கூறி வருகின்றன.

* இந்த பணிகளை தினமும் பகல், இரவு என தொடர்ந்து செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

* பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணித்து நேற்று முதல் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.