Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வருவாய்த்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.54 கோடி செலவில் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

சென்னை: வருவாய் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் ரூ.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். வருவாய் துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா வழங்குதல் போன்ற சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 111 வருவாய்துறை அலுவலக கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.262 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, தற்போது வரை 71 கட்டடங்கள் ரூ.180 கோடியே 19 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் ரூ.17 கோடியே 52 லட்சத்து 33 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், கன்னியாகுமரி மாவட்டம் - தக்கலை மற்றும் கடலூர் மாவட்டம் - பண்ருட்டி ஆகிய இடங்களில் ரூ.65 லட்சத்து 76 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் என மொத்தம் ரூ.54 கோடியே 80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் பெ.அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் முரளீதரன், மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். காணொலி காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்திலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட ஆட்சி தலைவர் சதீஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.