ஈரோடு: கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் வருவாய் துறை ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கினர். தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிக்கென ஒதுக்கப்பட்டிருந்த 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு 2 முகாம்கள் மட்டுமே நடத்திட வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு சிறப்பு திட்ட பணிகளை மேற்கொள்ள புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், இன்றும் (3ம் தேதி), நாளையும் (4ம் தேதி) என 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஈரோடு தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் இல்லாததால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.