Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓய்வுபெறும் காலத்தில் அரசியல் செய்கிறார்கள் கட்சி ஆரம்பித்ததும் சாதனை செய்ததுபோல பேசுகிறார்கள்: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

சென்னை: அதிமுக யார் கையில் இருக்கிறது என்றுகூட தெரியாமல் சிலர் அறியாமையால் பேசுகிறார்கள். சிலர் கட்சி ஆரம்பித்த உடனேயே இமாலய சாதனை படைத்தது போல பேசுறாங்க, நாங்க அப்படியல்ல என்று தவெக தலைவர் விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி நேற்று பதிலடி கொடுத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரசார பயணம் மேற்கொண்டார். முதலில், காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் பிரசார பயணம் நடந்தது. மாவட்ட செயலாளர் பி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் புனிதமான பூமி. அதிமுக என்பதே அண்ணாவின் பெயரையும், கொடியில் அண்ணாவின் உருவத்தையும் கொண்டது. இந்த புனித பூமியில் பேசுவதே என் பாக்கியம். யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்?. இங்கிருக்கும் அவ்வளவு பேரும் அதிமுக தொண்டர்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசி வருகிறார்கள்.

மரம் உடனே வளராது, செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூப்பூத்து காய்காய்க்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது. எம்ஜிஆர் கட்சி தொடங்கி 5 ஆண்டுகாலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார். பேறிஞர் அண்ணா எடுத்தவுடனே முதல்வர் ஆகவில்லை, நிறைய போராட்டங்களை சந்தித்தார், மொழிக்காக சிறை சென்றார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு தன்னையே அர்ப்பணித்தார். நம் தலைவர்கள் எல்லாம் அர்ப்பணித்து வாழ்ந்து அதிமுகவை அடையாளம் காட்டிச் சென்றனர். அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுறாங்க. நாங்க அப்படியல்ல. மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்து தான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள்.

யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா எல்லோரும் எடுத்ததுமே முதல்வர் ஆகவில்லை. மக்கள் நன்மதிப்பைப் பெற்றபின்னர்தான் முதல்வராக வர முடிந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

* ஒரு தேர்தலைக்கூட சந்திக்காமல் பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல்

உத்திரமேரூரில் எடப்பாடி பழனிசாமி பேசும்ேபாது, ‘சில பேர் புதிதாக கட்சியைத் தொடங்கி இரண்டாவது மாநாடுதான் நடத்தியிருக்காங்க, அது ஒன்றரை வயதுக் குழந்தை. இன்னும் ஒருமுறை கூட எம்.எல்.ஏ ஆகவில்லை, ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைப்படுவது தவறல்ல. இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமலே பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல்’’ என்றார்.