Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மயிலாப்பூரில் சாய்பாபா கோயிலை அகில இந்திய சாய் சமாஜம் நிர்வகித்து வருகிறது. இதற்கு சொந்தமாக பள்ளி, கடைகள் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன. சமாஜத்தின் நிர்வாக குளறுபடி, முறைகேடு தொடர்பாக, தங்கராஜ் உள்ளிட்ட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, சமாஜத்துக்கு சொந்தமான சொத்துகளின் வரவு, செலவு கணக்குகள், உண்டியல் வருமானம், அசையா சொத்துகளின் நிலை, சமாஜத்தின் நிதி விவரங்கள், சமாஜத்தில் சங்க துணை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்து உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆய்வுக்கு சென்ற நீதிபதிக்கு சமாஜ் நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதையும் செய்யவில்லை. வரவு, செலவு கணக்குகளையும் சரிவர தணிக்கை செய்யவில்லை.பொதுக்குழுவில் முடிவு எடுக்காமல் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

சமாஜத்தில் முன்பு 5 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 522 பேர் மட்டுமே உள்ளனர். சமாஜ நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதிகப்படியான தொகை எந்த ஒப்புதலும் பெறப்படாமல் செலவழிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆய்வு செய்த நீதிபதியின் அறிக்கை அடிப்படையில் சாய் சமாஜ் நிர்வாக குழு உடனடியாக கலைக்கப்படுகிறது. அந்த சமாஜத்தை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கிறோம்.

இந்தக் குழுவுக்கு ஆடிட்டர்கள் அனந்த ராமன், அருண் பாலாஜி ஆகியோர் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். சமாஜத்தின் பொறுப்பாளர்கள் உடனே தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி, ஓய்வு நீதிபதிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்து போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தக்குழு நிர்வாகம் தொடர்பான இடைக்கால அறிக்கையை, செப்டம்பர் 14ல் தாக்கல் செய்ய வேண்டும், என்று உத்தரவிட்டனர்.