சென்னை: கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிபதிக்கு எதிராக யூடியூப் சேனல் ஒன்றில் ஓய்வுபெற்ற கைரேகை நிபுணரும், ‘சன் டிடெக்டிவ் ஏஜென்சி’ நடத்தி வரும் நேதாஜி மக்கள் கட்சி தலைவரான வரதராஜன் ஒருமையிலும், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவதூறாக பேசியிருந்தார்.
இதுகுறித்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி நேற்று முன்தினம் வீடியோ ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்படி விசாரணை நடத்த உயர் காவல்துறை அதிகாரிகள் சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி விசாரணை நடத்திய போது, வரதராஜன் தனது யூடியூப் சேனலில் நீதித்துறையை கலங்கப்படுத்தும் வகையில் பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து, வதந்தியை பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று வரதராஜனை கைது செய்தனர். மேலும், அவர் பேசிய வீடியோவை நீக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரூர் விவகாரத்தில் நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் நேற்று முன்தினம் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.