ரெஸ்ட் ரூம் வெண்டிங் மிஷின்களில் நாப்கின்கள் இல்லை: சென்னை விமான நிலையத்தில் பெண் பயணிகள் கடும் அவதி; அவசர தேவைக்காக பெண் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கெஞ்சும் பரிதாபம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில், பெண்கள் ரெஸ்ட் ரூம்களில் (கழிவறை) உள்ள வெண்டிங் மிஷின்களில் பெண்களின் அவசர தேவைக்கான நாப்கின்கள் ஸ்டாக் இல்லாமல் இருப்பதால் பெண் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு விமான நிலையத்தில் டெர்மினல்கள் 1 மற்றும் 3, சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 2 ஆகிய டெர்மினல்கள் உள்ளன. இந்த 3 டெர்மினல்களிலும் வருகை, புறப்பாடு பயணிகள் நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். இந்த பயணிகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 30,000க்கும் அதிகம்.
பெண் பயணிகளுக்கு மாதவிடாய் காலங்கள் எப்போது ஏற்படும் என்பது தெரியாமல் எதிர்பாராத நேரங்களில் ஏற்படுவது உண்டு. அந்த நேரங்களில் பெண் பயணிகளின் அவசர தேவைக்காக சென்னை விமான நிலையத்தின் மூன்று டெர்மினல்களிலும் வருகை, புறப்பாடு பகுதிகளில் உள்ள பெண்கள் ரெஸ்ட் ரூம்களில் பெண்களின் அவசரத் தேவைகளுக்கான சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கக்கூடிய வகையில் தானியங்கி வெண்டிங் மிஷின்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பெண்கள் மிஷின்களில் இருந்து நாப்கின்களை பெற்றுக் கொள்வார்கள்.
ஆனால் சமீப காலமாக, சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் பெண்கள் ரெஸ்ட் ரூம்களில் அமைக்கப்பட்டுள்ள வெண்டிங் மிஷின்களில் பெண்கள் பட்டன்களை அழுத்தினால் நோ ஸ்டாக் என்ற குறியீடு தான் வருகிறது. இதனால் தினமும் பெண் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு சோதனைகள் நடக்கும், செக்யூரிட்டி செக்கப் ஏரியாவில் உள்ள பெண்கள் ரெஸ்ட் ரூம்களில், இதேபோல் வெண்டிங் மிஷின்களில் ஸ்டாக் இல்லை என்று வருவதால் பெண்கள் அடையும் அவதிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
பாதுகாப்பு சோதனைகள் முடிவடைந்த பின்பு அந்த பயணி வெளியில் செல்ல முடியாது. இதனால் பெரும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் பாதுகாப்பு அதிகாரிகளிடம், பெண் பயணிகள் தங்கள் அவசர தேவையை நாசுக்காக எடுத்துக் கூறி, அவர்கள் உதவியுடன் பாதுகாப்பு சோதனை பகுதிக்கு வெளியில் உள்ள மருந்தகங்களில், சானிட்டரி நாப்கின் வாங்கி வந்து பயன்படுத்த வேண்டிய ஒரு துரதிஷ்டமான சூழ்நிலை அமைகிறது. ஆனால் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பாதுகாப்பு சோதனைகள் முடிவடைந்த ஒரு பயணியிடம் வெளியில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே சில பாதுகாப்பு அதிகாரிகள், பெண் பயணிகளின் அவசர வேண்டுகோளை ஏற்க மறுத்து விடுகின்றனர்.
இதனால் அந்த நேரங்களில் பெண் பயணிகள் அடையும் தவிப்புகள் சொல்ல முடியாதது. இதுபோல் சமீப காலமாக, சென்னை விமான நிலையத்தில் பெண் பயணிகள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். அதில் பாதிக்கப்பட்ட பெண் பயணி ஒருவர், சமூக வலைதளம் மூலம் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பதிவு செய்திருந்தார். அதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்ட பதிலில் உங்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்னைக்கு நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரே நேரத்தில் அதிகமான பெண் பயணிகள் அந்த வெண்டிங் மிஷின்களை பயன்படுத்துவதால் இப்படி ஸ்டாக் இல்லாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இனிமேல் அதிகமானவைகள் ஸ்டாக் வைக்க, நடவடிக்கை எடுக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் பெண் பயணிகள் பலர் இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கின்றனர். பெண் பயணிகள் தரப்பில் கூறும்போது, ‘‘சென்னை விமான நிலையத்தில் பெண்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெர்மினல் 1, புறப்பாடு பகுதியில் இளம்பெண் ஒருவர் இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகி அவதி அடைந்தார். ஆனால் அங்கு பணியில் இருந்த பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்த உதவியால் அவர் பிரச்னை தீர்ந்தது. ஆனாலும் இதேபோல் பாதிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து எடுத்துக் கூறி, தீர்வு காண முயற்சிப்பது பெண் பயணிகளுக்கு பெரும் அவமானமாக உள்ளது.
ஆனால், சென்னை விமான நிலையத்தில், புகை பிடிக்கும் பகுதி தனியாக உள்ளது. அதை மிகத் தெளிவாக அனைவருக்கும் தெரியும் விதத்தில், “சைன் போர்டு” வைத்து விளம்பரப்படுத்தி உள்ளனர். ஆனால் பெண்களின் அவசர தேவைகளில் அலட்சியம் காட்டுகின்றனர். இதைப் போன்ற நிலை இனிமேல் ஏற்படாத வண்ணம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, ‘‘பெண் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பான வசதிகளை இந்திய விமான நிலைய ஆணையம் செய்து கொடுத்துள்ளது.
ஏதாவது ஒரு பெண் ரெஸ்ட் ரூமில் வெண்டிங் மிஷினில் ஸ்டாக் இல்லாமல் இருந்தால் உடனே அதை பயன்படுத்தும் பெண் பயணி அருகே உள்ள மற்றொரு பெண் ரெஸ்ட் ரூம் சென்று அங்குள்ள மிஷினை பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு ஒரே நேரத்தில் ஒரே பெண் ரெஸ்ட் ரூமில் அதிகமான பெண் பயணிகள் வெண்டிங் மிஷினை பயன்படுத்துவதால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். ஆனாலும் நாங்கள் பெண் பெண் ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள் மூலம் அவ்வப்போது ஆய்வு செய்து ஸ்டாக் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்’’ என்றனர்.
