டெல்லி: மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் வாக்கு திருட்டு தொடர்பாகப் பல புகார்களை முன்வைத்திருந்தார். இது நாடு முழுக்க பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. தற்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் நடைபெற்று வருவதால், அங்கேயும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் காங்கிரஸ் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற நாடாளுமன்றத்தில் வெற்றி பெற 3ல் இரு பங்கு ஆதரவு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.