ராஜினாமா செய்தால் மறுநிமிடம் ஜெயிலில் இருப்பார் மாப்பிள்ளை ரங்கசாமிதான்... அவர் போட்டிருப்பது பாஜ சட்டை... புதுவை முன்னாள் முதல்வர் விளாசல்
புதுச்சேரி: ‘ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்தால் மறுநிமிடம் ஜெயிலில்தான் இருப்பார். மாப்பிள்ளை ரங்கசாமிதான். அவர் போட்டிருப்பது பாஜ சட்டை’ என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: என்.ஆர்.காங்கிரஸ், பாஜ இடையே நடந்த திரைமறைவு நாடகம் வெளியே வர ஆரம்பித்துள்ளது. முதல்வர் ஒரு அதிகாரியை நியமிக்கக்கூட எனக்கு அதிகாரமில்லை என எனது பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் பேசியதாக கூறப்படுகிறது.
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய முடிவெடுத்தற்கு காரணம் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனம் மட்டுமல்ல. 6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க ரூ.90 கோடி கைமாறி உள்ளது. அந்த கோப்பு கவர்னரின் அலுவலகத்தில் உள்ளது. 100 பிராந்திக் கடைகள் திறப்பதற்கு முதல்வர் அனுப்பிய கோப்பு கவர்னரிடம் இருக்கிறது. இதுபோன்ற லஞ்சம் வாங்குகின்ற கோப்புகளை கவர்னர் நிறுத்தி வைத்திருக்கின்றார். இதனால் தான் ராஜினாமா செய்யப்போகிறேன் என்ற நாடகத்தை ரங்கசாமி ஆடி மிரட்டும் வேலையை ஆரம்பித்தார். அது பிசுபிசுத்து போய்விட்டது.
பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா புதுச்சேரிக்கு வருகிறார். பாஜ கூட்டத்தை நடத்துகிறார். ரங்கசாமி வீட்டுக்கு செல்கிறார். ரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு சமாதானம் என கூறுகிறார் முதல்வர். தனது பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்று கூறிய ரங்கசாமி ராஜினாமா செய்யாமல் தற்போது கவர்னரிடம் சரண்டர் ஆகி இருக்கிறார்.பாஜகவும், என்ஆர் காங்கிரசும் நாடகம் ஆடுகிறார்கள். ஒருநிமிடம்கூட ரங்கசாமி முதல்வர் நாற்காலியை விட மாட்டார்.
பாஜக எதை நடத்த நினைக்கிறதோ அதை நடத்துகிறது. ரஜினி படத்தில் வருவதுபோல் தேஜ கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி தான் மாப்பிள்ளை. ஆனால் அவர் போட்டிருப்பது பாஜ சட்டை. டம்மி முதல்வர் என ரங்கசாமி மீண்டும் நிரூபித்துள்ளார். தற்போது மாநில அந்தஸ்து கோரிக்கையை மீண்டும் தூக்கியுள்ளார். எந்த காலத்திலும் ரங்கசாமி ராஜினாமா செய்ய மாட்டார். அப்படி செய்தால் மறுநிமிடம் ரங்கசாமி ஜெயிலில்தான் இருப்பார். பாஜகவே அவரை சிறையில் தள்ளும். ஏனென்றால் அவர் மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.