Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய விதி அமல்: ரிசர்வ் வங்கி

சென்னை: வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யவில்லையென்றால், அந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (டெப்) தானாகவே மாற்றம் செய்யப்பட்டுவிடும். இவ்வாறு கிடைக்கும் நிதியை மக்களிடம் நிதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கல்வி வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது.

ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.58 ஆயிரத்து 330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8 ஆயிரத்து 673 கோடியும் உரிமை கோரப்படாமல் முடங்கியுள்ளது. சம்மந்தப்பட்ட வங்கி கணக்குதாரர் மரணமடைந்து, அவரால் முன்மொழியப்பட்ட வாரிசுதாரர் (நாமினி) பணத்துக்கு உரிமை கோராததுதான் இதற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.

வங்கியில் கணக்கு தொடங்குபவர்கள், லாக்கர்களில் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைப்பவர்கள் தனக்கு ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், அந்த பணத்துக்கும், லாக்கர்களில் உள்ள உடைமைகளுக்கும் பொறுப்பாக வாரிசுதாரராக ஒருவரை மட்டுமே தற்போது நியமிக்கலாம். இதில், வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.

புதிய விதிகளின்படி வங்கியில் கணக்கு, வங்கிகளில் லாக்கர் வசதியை வைத்திருப்பவர்கள் வாரிசுதாரராக 4 பேரை நியமித்துக்கொள்ளலாம். இந்த வசதி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. உரிமை கோராமல் வங்கி கணக்குகளில் முடங்கும் பணத்தை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* புதிய விதிகள்

இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிய விதிகளின்படி, வங்கியில் கணக்கு பராமரிப்பவர்கள் தாங்கள் விரும்பும் 4 பேரை வாரிசுதாரர்களாக நியமித்து, அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டிய தொகையையும் வௌிப்படையாக அறிவிக்கலாம். இதேபோல லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களும் வாரிசுதாரர்களாக 4 பேரை நியமிக்கலாம்.

லாக்கர் பராமரிப்பவர்கள் ஒருவேளை மரணம் அடைந்தால், அவருக்கு பின்னர் யார் அதனை கையாளவேண்டும் என்பதையும் தெரிவிக்கலாம். இதனால் உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும். புதிய விதியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று கூறினர்.