Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்பதிவு செய்யப்படாத பொது டிக்கெட் கவுன்டர்கள் தனியார்வசம் ஒப்படைப்பு: சிக்கன நடவடிக்கை என ரயில்வே விளக்கம், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

சென்னை: சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு செய்யப்படாத பொது டிக்கெட் கவுன்டர்களை தனியார் வசம் ஒப்படைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திய ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது அல்லது தனியார் பங்களிப்புடன் நடத்துவது தொடர்பாக பலரது ஆட்சி காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், கோடிக்கணக்கான பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த முயற்சி நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ ஆட்சியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் நிதி நெருக்கடி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு தேவைகள் மற்றும் சேவை தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டது. இவை ரயில்வே துறையில் உள்ள நிர்வாக சிக்கல்களை குறிக்கிறது.

அதாவது, தனியார் சார்பில் ரயில்களை இயக்குதல், ரயில் நிலையங்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகை விடுதல், பொது டிக்கெட் (முன்பதிவு செய்யப்படாத) கவுன்டர்களை மூடி, தனியார் ஏஜென்ட்களை பயன்படுத்துதல் போன்ற முடிவு எடுக்கப்பட்டது. இதில், சாதாரண டிக்கெட் புக்கிங் சேவை, ஸ்டேஷன் டிக்கெட் புக்கிங் ஏஜென்ட்கள், மற்றும் ஆட்டோமேட்டிக் டிக்கெட் வெண்டிங் மெஷின்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

குறிப்பாக, 2019 முதல் சாதாரண டிக்கெட் புங்கிங் கவுன்டர்கள் செயல்படுகின்றன. மேலும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களும் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்கின்றனர். இவை தற்போது அதிகளவில் தனியார் ஏஜென்ட்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதாவது, இந்திய ரயில்வே முன்பதிவு செய்யப்படாத பொது டிக்கெட் கவுன்டர்களை மூடுவதற்கும், இந்த பணிகளில் இருந்து நிரந்தர ஊழியர்களை விலக்குவதற்கும் முடிவு செய்துள்ளது.

இதற்கு மாற்றாக, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் விற்பனையை கையாள தனியார் ஏஜென்ட்களை அதிக அளவில் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களில் நடமாடும் உதவியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முயற்சி தற்போது சோதனை முயற்சியாக உள்ளது. இவை படிப்படியாக விரிவாக்கப்படவுள்ளது.

இதனால் பொது டிக்கெட் கவுன்டர் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, அவர்களை மற்ற துறைகளுக்கு மாற்றவுள்ளனர். அந்த இடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக, தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவை ஸ்டேஷன் மாஸ்டர்களின் அதிகப்படியான பணிச்சுமை காரணமாகவும், அவர்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியாததால் ஏற்பட்டவை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது, ஸ்டேஷன் மாஸ்டர்கள், ரயில் இயக்கத்திற்கு அப்பாற்பட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கின்றனர். இதில், டிக்கெட் விற்பனை போன்ற வணிக பணிகள், ரயில் பயண தகவல்களை ஒலிபரப்புதல், பயணிகளிடம் கருத்து கேட்பது, பயணிகள் பெட்டி அடையாள அமைப்பை கண்காணிப்பது ஆகியவை அடங்கும். மேலும், நிலையத்தின் தூய்மை பணியாளர்களை மேற்பார்வையிடுவதும் அவர்களின் பணியாக உள்ளது. இது போன்ற மொத்த பணிகளையும் ஸ்டேஷன் மாஸ்டர்களே செய்கின்றனர்.

அதாவது 10 ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஆள் செய்வதால் பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் எந்த ரயில் எப்போது கடந்து சென்றது என்ற விவரங்கள் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரியாமல் போகும் நிலை உள்ளது. இதனால் பெரும் விபத்தும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, தெற்கு ரயில்வே, ஸ்டேஷன் மாஸ்டர்களை டிக்கெட் விற்பனை மற்றும் பயண தகவல் சேவைகளில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ரயில்வே நிர்வாக செலவை குறைக்கும் வகையில், தனியார் ஏஜென்ட்களை பயன்படுத்தி டிக்கெட் விற்பனையை வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த பணியில் இருக்கும் ஏராளமானோர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், பொது டிக்கெட் டிக்கெட் கவுன்டர் தனியார் வசம் சென்றால், மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இதற்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது தமிழ்நாடு, கேரளாவில் உள்ள பல ரயில் நிலையங்களில் இந்த தனியார் ஏஜென்ட்கள் மூலம் பொது டிக்கெட் கவுன்டர் செயல்படுகின்றன. இவர்கள், கமிஷன் அடிப்படையில் வருமானம் ஈட்டுகின்றனர். இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காலிப்பணியிடங்கள் நிரப்பபடும் வரை தனியார் ஏஜென்ட்கள் இந்த பணியில் இருப்பார்கள்.

ரயில்வே துறையில் வரவை விட செலவு அதிகமாக இருக்கிறது. ரயில்வே மூலம் ஆட்களை தேர்வு செய்தால், அந்த நபருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படும். இதே தனியாருக்கு வழங்கினால் ரயில்வேக்கு லாபம் தான். காலிபணியிடங்கள் குறித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு விட்டால் தான் நிரப்பப்படும். அதுவரை தனியார் ஏஜென்ட்கள் தான் பொது டிக்கெட் கவுன்டர்களை நடத்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த மாற்றத்தை நவீனமயமாக்கல் மற்றும் செலவு குறைப்பு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், இது ரயில்வேயின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கு உதவலாம். இருப்பினும், பயணிகள் வசதி மற்றும் வேலைவாய்ப்பு கண்ணோட்டத்தில், குறிப்பாக தொழில்நுட்ப அறிவு குறித்த தகவல்கள குறைவாக தெரிந்திருக்கும் அல்லது தெரியாத பயணிகளுக்கும், நிரந்தர ஊழியர்களுக்கும் இது சவால்களை உருவாக்கும்.

* ரயில்வே மூலம் ஆட்களை தேர்வு செய்தால், அந்த நபருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படும். இதே தனியாருக்கு வழங்கினால் ரயில்வேக்கு லாபம் தான்.