Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் நியமனம் உபியில் 69 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் ரத்து: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் உபியில் 69 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 69,000 ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான விளம்பரம் 2018 டிசம்பரில் வெளியிடப்பட்டது. 2019ம் ஆண்டு 4,10,000 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர். 2020ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 1,47,000 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், 1,10,000 பேர் ரிசர்வ் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தத் தகுதிப் பட்டியலின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தில் 69,000 ஆசிரியர்கள் பணி நியமனம் நடைபெற்றது.

இருப்பினும், இடஒதுக்கீடு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 19,000 வேட்பாளர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் 69ஆயிரம் ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அடிப்படைக் கல்வி விதிகள் மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றை பின்பற்றி மூன்று மாதங்களுக்குள் புதிய தகுதிப் பட்டியலைத் தயாரிக்குமாறு உபி பா.ஜ அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ அரசின் சதிக்கு பதிலடி: ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘69ஆயிரம் ஆசிரியர்களின் பணிநியமனம் குறித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது இடஒதுக்கீட்டு முறையுடன் விளையாடும் பாஜ அரசின் சதிகளுக்கு தகுந்த பதிலடியாகும். இது கடந்த 5 ஆண்டுகளாக சமூக நீதிக்காக போராடும் ஒவ்வொருவரின் வெற்றியுமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.