திருமலை: தெலங்கானா மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி தெலங்கானா அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு கடந்த 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, செப்டம்பர் 29ம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் தெலங்கானா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு மனு செய்தது. இதனை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கூட்டு நடவடிக்கை குழு நேற்று பந்த்திற்கு அழைப்பு விடுத்தது. பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.