சென்னை: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இணைந்து தமிழகத்தில் உள்ள உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று சென்னை சைதாப்பேட்டை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். யுஜிசி நெறிமுறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்பில் மற்றும் பிஹெச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். யுஜிசி அறிவித்துள்ளபடி பணியில் உள்ள ஆசிரியர்களின் இணை பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு பிஹெச்டி கட்டாயம் என்பதை தளர்த்த வேண்டும். புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.