காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம்- கட்டளை இடையே குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிப்பாக்கத்தில் இருந்து கட்டளை ஊராட்சிக்கு செல்ல கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. இச்சாலை அய்யம்பேட்டை சேரி, மகாணிப்பட்டு, உப்பரந்தாங்கல் உள்ளிட்ட கிராம மக்களின் இணைப்பு சாலையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இச்சாலையானது ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள், தனியார் கம்பெனி தொழிலாளர்கள், விவசாயிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து கட்டளை கிராமத்திற்கு செல்லும் தார்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.