அரக்கோணம் : அரக்கோணம் அடுத்த மோசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு சுமார் 30 நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும், இதனால், தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி நேற்று முன்தினம் திடீரென மோசூர் பகுதிக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தொழிலாளர்கள் 100 நாட்களுக்கு வேலை வழங்காமல், 30 நாட்கள் வேலை வழங்குகின்றனர்.
எனவே 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் எனவும், மேலும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதேபோல் மோசூர் பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், பொதுமக்களின் வசதிகளுக்காக அங்கு சுரங்க நடைபாதை ஏற்படுத்த வேண்டும்.
இதில் வாகனங்களும் செல்லும் வகையில் வசதியினை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தங்களின் கோரிக்கைகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் பிரகாஷ், பழனி உட்பட பலர் இருந்தனர்.