உடுமலை : உடுமலை அருகே தளியில் இருந்து எரிசனம்பட்டி செல்லும் சாலையில் வாளவாடி பிரிவு உள்ளது. திருமூர்த்திமலை செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கேரளா மூணாறு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன.
இதனால் எப்போதும் வாகனங்கள் சென்றவண்ணம் உள்ளன. வாளவாடி பிரிவு அருகே சாலையோரம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடியாத நிலையில் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
வாகனங்கள் சாலையில் இருந்து சற்று இடதுபுறம் இறங்கினாலும் கவிழ்ந்துவிடும். எனவே பணிகளை முடித்து உடனடியாக பள்ளத்தை மூட வேண்டும். மேலும், அப்பகுதியில் மழை நீரில் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி பள்ளம் உருவாவதால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.