ரெப்போ வட்டி 5.5 சதவீதமாக நீடிப்பு: குறுகியகால கடன்களுக்கான வட்டியில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.5 சதவீதமாக நீடிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான நிதிக்கொள்கை கூட்டம் நேற்று முடிந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். அவர் கூறியதாவது:
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இது 5.5 சதவீதமாகவே நீடிக்கும். பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக அதிகரிக்கும். பண வீக்கம் 2.6 சதவீதமாக இருக்கும்.
அமெரிக்காவின் வரி விதிப்பு பண வீக்கத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதேநேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு வரலாம்.
பங்குகளை அடமானமாக வைத்து பெறப்படும் கடன்களுக்கான உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல், ஐபிஓவை பொறுத்தவரை ஒரு நபருக்கான கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் . அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி டிஜிட்டல் வங்கி சேவையை பெறலாம். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார். அடுத்த நிதிக்கொள்கை மறுசீராய்வு கூட்டம் டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது.