திருத்தணி: திருத்தணி அருகே மின்சாரம் பாய்ந்து 2 காளை மாடுகள் பலியானது. திருத்தணி அருகே வீரகநல்லூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த வெங்கடரத்தினம் என்ற விவசாயியின் நிலத்தில் இன்று காலை உழவு பணியில் ஈடுபடுவதற்காக தனது 2 காளை மாடுகளை ஓட்டி சென்றார்.
பின்னர் ஏர் கலப்பையில் 2 மாடுகளை பூட்டி நிலத்தை உழுது ெகாண்டிருந்தார். அப்போது வயல்வெளியை ஒட்டியிருந்த மின்கம்பத்தின் உள்ள கம்பியில் 2 காளை மாடுகளும் உரசியபடி சென்றன. இதில் திடீரென மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே 2 மாடுகளும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.
எனினும், இத்தாக்குதலில் விவசாயி கண்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை கேள்விபட்டதும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சோகத்துடன் பார்த்து விட்டு சென்றனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.


