Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு மண்டலத்துக்கு ரூ.1 கோடி வீதம் ஒதுக்கீடு செய்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்: விரைந்து முடிக்க திட்டம்

சென்னை: மழை ஓய்ந்த நிலையில், சென்னை முழுவதும் சேதமடைந்த சாலைகளை ரூ.15 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த மழை வருவதற்குள் இப்பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பருவமழை காலம் வந்து விட்டாலே சென்னை மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்குவது என்பது எழுதப்படாத ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால், வெளுத்து வாங்கும் மழையால் தேங்கும் தண்ணீரை வேகமாக வெளியேற்றினாலும், சென்னையில் புதிதாக போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. வெள்ளநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடும் போது தார்சாலைகள் சிதிலமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மோசமாகி விடுகிறது. ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் இந்த பாதிப்பை சென்னைவாசிகள் சந்தித்தே ஆக வேண்டிய நிலைமை உள்ளது.

தற்போது மோன்தா புயல் காரணமாக இதுவரை சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், 3 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து பெய்த மழையால், சென்னையில் பல இடங்களில் சாலைகள் கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் நகரில் உள்ள பேருந்து சாலைகள், உட்புற சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. குறிப்பாக வளரசரவாக்கம் ஆர்காடு சாலை, ஐயப்பந்தாங்கல், வானகரம் முதல் அம்பத்தூர் சாலை, சேலையூர், பாடி சிடிஆர் ரோடு, தரமணி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் தொடர் மழையால் கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரிய பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக தோண்டப்பட்ட சாலைகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

குண்டும் குழியுமான சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அந்த இடங்களை கடந்து செல்லவே நீண்ட நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசல் என்பது கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. சாலைகளில் சில இடங்களில் காணப்படும் திடீர் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து செல்வதையும் பார்க்க முடிகிறது. எனவே இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பருவமழை காலம் என்பதால் ஜனவரி மாதம் வரை தார்சாலைகள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இப்போது கடந்த வாரம் பெய்த தொடர் மழைக்கு சில இடங்களில் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதை கவனத்தில் கொண்டு, தற்போது சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சாலைகள் புதிதாகவும் போடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் சென்னையில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தெரியவந்தது. மேலும் சில இடங்களில் விபத்துகளையும் சந்திப்பதாக தகவல் வந்தது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் சென்னை முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மழை நின்று வெயில் அடித்து வருவதால் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ரூ.15 கோடி மதிப்பில் புதிதாக சாலைகளும் மற்ற இடங்களில் சாலைகளை செப்பனிடும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த மழை வருவதற்கும் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.