உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி ரேணுகாசுவாமி கொலை வழக்கை நடிகர் தர்ஷன் இழுத்தடிக்கிறாரா?: நீதிமன்றத்தில் அரசு தரப்பு பகீர் குற்றச்சாட்டு
பெங்களூரு: கடந்த ஜூன் மாதம், கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி என்பவர் கடத்தப்பட்டு, கொடூரமாக தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா மற்றும் கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தர்ஷன் உள்ளிட்ட 7 பேரின் ஜாமீனை கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு விசாரணையை தாமதப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.பிரசன்னா குமார், விசாரணை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் 20 முறை விசாரணை நடந்தும், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான வாதங்கள் கூட இன்னும் தொடங்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்து வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், தங்களை விடுவிக்கக்கோரி பல மனுக்களையும் தாக்கல் செய்து வருவதாக அரசுத்தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, 2வது குற்றவாளியான நடிகர் தர்ஷன், சிறையில் தனக்கு சிறப்பு வசதிகள் செய்து தரக்கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், சிறைத்துறை விதிகளின்படி அனைத்து வசதிகளும் ஏற்கெனவே அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இருந்தபோதிலும், தர்ஷன் மீண்டும் சிறையை நீதிமன்றமே ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சிறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்களைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறையில் ஆய்வு செய்து, ‘தர்ஷனின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை’ என கடந்த 17ம் தேதி அறிக்கை அளித்தது. இதன்மூலம், ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே இதுபோன்ற செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர்’ என்று அரசுத்தரப்பு தனது மனுவில் சாடியுள்ளது.
