திருமலை: புனரமைப்பு பணி முடிந்து திருப்பதி தெப்பக்குளத்தில் நீராட மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த ஜூலை 20ம்தேதி திருப்பதி தேவஸ்தானம் தெப்பக்குளம் புனரமைக்கும் பணிகளை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, நீர்வளத் துறையை சேர்ந்த சுமார் 100 ஊழியர்கள் தெப்பக்குளத்தில் உள்ள பழைய தண்ணீரை அகற்றி, குளத்தில் உட்பகுதியில் சேர்ந்துள்ள மணல் மற்றும் பாசிகளை அகற்றினர். மேலும் படிகள் வண்ண ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்டன. இதனையடுத்து தெப்பக்குளத்தில் சுமார் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் நிரப்பி பழுதுபார்க்கும் பணி நிறைவடைந்தது. குளம் சீரமைப்பு காரணமாக பக்தர்கள் கடந்த ஒரு மாதமாக புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.
* 15 மணி நேரம் காத்திப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை முதல் இரவு வரை 75,668 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 29,099 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.45 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 25 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
* பெண்களுக்கு இலவச பஸ் பயணம்
ஆந்திர போக்குவரத்துதுறை தலைவர் கொனகல்லா நாராயணா கூறியதாவது: திருப்பதி வரை பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்த நிலையில், திருமலை வரை இலவச பயணத்தை ஆந்திர அரசு நீட்டித்துள்ளது. இதற்காக சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. திருப்பதி மலைப்பாதை சாலை என்பதால் பஸ்சில் உட்காருவதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண்கள் மட்டுமே பயனடைய முடியும். இலவச பயணத்துக்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஆதாரமாக காண்பிக்க வேண்டும். இந்த திட்டம் தொடங்கிய மறுநாள் ஆகஸ்ட் 16 சுமார் 10 லட்சம் பெண்கள், 17ம் தேதி 15 லட்சம், 18ம்தேதி 18 லட்சம் பேர் பயணம் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.