பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் குழுமத்தைச் சேர்ந்த ரெனால்ட் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய டஸ்டர் எஸ்யுவி காரை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் 2012ம் ஆண்டு ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. 2022ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது 4வது தலைமுறை காராக அடுத்த ஆண்டு குடியரசு தினத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் டெப்லைஸ் கூறுகையில், ‘‘நம்பகத்தன்மை மற்றும் புதுமையின் சின்னமாக ரெனால்ட் கார் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ரெனால்ட் டஸ்டர் நவீன வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட செயல்திறனை கொண்டதாகவும், ரெனால்ட் பாரம்பரியம் மாறாததாகவும் இருக்கும்’’, என்றார். இந்த புதிய கார் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், சர்வதேச சந்தையில் உள்ள டஸ்டர் காருடன் ஒப்பிடுகையில் 3 இன்ஜின் தேர்வுகள் உள்ளன. 1.0 லிட்டர் எல்பிஜி இன்ஜின் 100 பிஎஸ் பவரையும் 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 கியர் பாக்ஸ் உள்ளது. 1.3 லிட்டர் மைல்டு ஹைபிரிட்டுடன் கூடிய டர்போ பெட்ரோல் இன்ஜின் 130 பிஎஸ் பவரையும் 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் இன்ஜின் 145 பிஎஸ் பவரையும், 205 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்படலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
+
Advertisement

