*தண்ணீர் ஓட்டத்துக்கு தடையாக இருந்ததால் நடவடிக்கை
நெல்லை : நெல்லை மீனாட்சிபுரம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஓட்டத்துக்கு தடையாக வளர்ந்து காணப்பட்ட முட்செடிகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி முழுவீச்சில் நடந்தது.
தமிழகத்திலேயே வற்றாத ஜீவநதியாக அழைக்கப்படும் தாமிரபணி நதியானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்பட நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அத்துடன் நெல்ைல, தூத்துக்குடி மாவட்ட விவசாய பாசனத்திற்கும் பெரிதும் இன்றிமையாததாகத் திகழ்கிறது.
மேலும் கால்நடை விலங்குகளின் தாகத்தையும் தீர்த்து வருகிறது. இத்தகைய ஏராளமான பெருமைகளை தன்னகத்தே கொண்ட தாமிரபரணி நதியானது, ஆறு துவங்கும் பாபநாசம் முதல் கடலில் சங்கமாகும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதி இடம்வரை கழிவுகள் கலப்பால் மாசுபட்டு காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது.
இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் செஞ்சுரி அடித்து காணப்படுகிறது. இந்த சூழலில் மேலும் மழை வெளுத்து வாங்கினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். இதனால் நீர் வழித்தடங்கள் தூர்வாரி பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆற்றில் வெள்ளபெருக்கத்தின் போது நெல்லை மீனாட்சிபுரம் பகுதியில் தண்ணீர் புகுவது வழக்கம்.
இதனால் அப்பகுதியில் வெள்ள ஓட்டம் தடைபடாமல் செல்ல தாமிரபரணி ஆற்றில் அடர்ந்து காணப்பட்ட முட்செடிகள், புதர்கள் ஜேசிபி, ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி முழுவீச்சில் நேற்று நடந்தது. இதேபோல் கொக்கிரகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கத்தின் எதிர்பகுதியிலும் அதிகப்படியான முட்செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.
குறிப்பாக கீழ்ப்பகுதியில் இருந்து அங்குள்ள கல் மண்டபத்திற்கு செல்லும் வழியிலும் முட்செடிகள், புதர் மண்டிக் காணப்படுவதால் இவற்றையும் போர்க்கால அடிப்படையில் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
