Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மத கலவரத்தை ஏற்படுத்தி நுழைய முயற்சிக்கும் சங்கிகளின் பருப்பு ஒருபோதும் தமிழ்நாட்டில் வேகவே வேகாது: இங்கு நடப்பது அடிமை பழனிசாமி ஆட்சி கிடையாது; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு

விழுப்புரம்: தமிழ்நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்தி நுழைய முயற்சிக்கும் சங்கிகளின் பருப்பு ஒருபோதும் வேகவே, வேகாது. இங்கு நடப்பது அடிமை பழனிசாமி ஆட்சி இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு எஸ்ஐஆர் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்த ஒன்றிய பாஜ அரசு தேர்தல் ஆணையம் மூலமாக நம் வாக்குரிமையை பறிக்கிறார்கள்.

எஸ்.ஐ.ஆரின் முழு நோக்கமே பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய இஸ்லாமிய மக்கள் மகளிர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை எப்படியாவது தடுத்து பறித்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி எஸ்ஐஆர்ஐ ஆதரித்துக் கொண்டு இருக்கிறார். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுக்கு எதிராக மூச்சுகூட அவரை கேட்காமல் விட முடியாது. அந்த அளவுக்கு அமித்ஷாவின் அடிமையாக, முதுகெலும்பு இல்லாத ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

அதிமுக, பாஜவின் கிளை அமைப்பாக இன்றைக்கு இருக்கிறது. உலகத்திலேயே ஒரே கரகாட்டக் கோஷ்டி என்றால், தன்னுடைய கட்சிப் பிரச்னைக்கு டெல்லி வரைக்கும் சென்று, அங்கு பஞ்சாயத்தை கூட்டி அங்கு என்ன முடிவெடுக்கிறார்களோ, அதை இங்கு செயல்படுத்தக் கூடிய ஒரே இயக்கம் இன்றைக்கு அதிமுக என்று சொன்னால் அது மிகையாகாது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆன்மிகப் பயணம் போகிறேன், ஹரித்வார் போகிறேன் என்று சொல்லிட்டு அமித்ஷாவைப் பார்த்துவிட்டு வந்து, அவருடைய அனுமதியை வாங்கி இன்றைக்கு வேறொரு இயக்கத்தில் சென்று சேர்ந்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார், முன்பெல்லாம் இவர்கள் திருட்டுத்தனமாக சென்றார்கள். இப்போது சொல்லிவிட்டே செல்கிறார்கள். அவர் இன்றைக்கு என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று யாருக்கும் தெரியாது. அதிமுகவை அமித்ஷா குத்தகைக்கு எடுத்துவிட்டார். அ.தி.மு.க. அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. இன்றைக்கு திருப்பரங்குன்றம், மதுரையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, சங்கிகள் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட முடியாதா என்று பல வழிகளில் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அத்தனை பேருக்கும் நாம் தெளிவாக ஒரு பதில் சொல்லியாக வேண்டும். சங்கிகளின் பருப்பு ஒருபோதும், தமிழ்நாட்டில் வேகவே வேகாது. ஏனென்றால் இங்கே நடந்து கொண்டிருப்பது உங்களின் அடிமை எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கிடையாது. இங்கே நடந்துக் கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் சுயமரியாதை ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி.

நம் தலைவர் இன்றைக்கு தமிழ்நாட்டின் நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பாசிச பா.ஜ.வை களத்தில் எதிர்கொள்கிற அரசியல் பணியாக இருக்கட்டும், ஒன்றிய அரசு தரக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற அரசுப் பணிகளாக இருக்கட்டும் இரண்டிலுமே இன்றைக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் மறு உருவமாக நம் தலைவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.