Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (5.11.2025) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பொது மற்றும் மறுவாழ்வுத்துறை ஆய்வுக் கூட்டத்தில், அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்கு சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம், சுயதொழில் தொடங்க ஆர்வமாகவுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் இரண்டாம் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 34 முகாம்களில் 3919 வீடுகள் கட்டி தரும் திட்டம், முன்னாள் படைவீரர்கள் தங்குவதற்கான புதிய விடுதி கட்டும் பணி போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

2021-2022 முதல் 2025-26 வரை பொது மற்றும் மறுவாழ்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட 90 அறிவிப்புகளில், 68 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முடிவுறும் தருவாயில் உள்ள ஏனைய அறிவிப்புகள் தொடர்பான பணிகளை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தினார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், வன விலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென மூன்று உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அமைப்பது குறித்தும், சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்தும், மரக்காணத்தில் பன்னாட்டுப் பறவைகள் மையம், தஞ்சாவூர் மாவட்டம், மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம், திண்டுக்கல் வனக்கோட்டம், அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம், பழவேற்காடு ஏரிப் பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்துவது போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டங்களின்போது, முதலமைச்சர் இந்த இரு துறைகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும் துரிதமாக முடித்து, மக்களின் பயன்பாட்டிற்காக விரைவாக கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இக்கூட்டங்களில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.