பல ஆண்டுகளாக துன்புறுத்தினார் பதிவுத்துறை உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவு
சென்னை: பதிவுத்துறையில் உயர் அதிகாரி ஒருவர், பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் ஜவுளிக்கு பேர் போன ஊரில் 47 வயது மதிக்கத்தக்க அமைதிப்படை இயக்குனரின் பெயர் கொண்டவர் பதிவுத்துறை உதவி அதிகாரியாக உள்ளார். இவர், சேலத்தில் அதே பதவியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியுள்ளார்.
அந்த நேரத்தில், அவருக்கு கீழ் பணியாற்றிய 35 வயது பெண் சார்பதிவாளர் மீது ஈர்ப்பு கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அவரிடம் நைசாக பேசி தனது வலையில் வீழ்த்த பார்த்துள்ளார். ஆனால் அவரது பசப்பு வார்த்தைகளுக்கு பெண் சார்பதிவாளர் இடம் கொடுக்கவில்லை. நெருப்பு மாதிரி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. முதலில் இரட்டை அர்த்த வசனங்களில் பேசியுள்ளார். பின்னர் தொட்டுப் பேசும் அளவுக்கு சென்றுள்ளார்.
அதோடு நிற்காமல் பைல் பார்க்கிறேன், உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி தனது வலையில் வீழ்த்த துடித்துள்ளார். அப்படியும் அவர் சம்மதிக்காமல் இருந்துள்ளார். அதிகாரியின் அறைக்குச் சென்றாலே தூரமாக நின்றுதான் பதில் அளிப்பாராம். ஒரு கட்டத்தில் பெண் அதிகாரி மீது தீராத மோகம் கொண்டவர், அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கத் தொடங்கினார். சம்மந்தமே இல்லாமல் மெமோ கொடுக்கத் தொடங்கினார்.
அதிகாரிகள் முன்பு திட்டுவது, அசிங்கப்படுத்துவது, சிறிய தவறையும் பூதாகரமாக்கி நெருக்கடி கொடுப்பது என டார்ச்சர் செய்து வந்துள்ளார். அப்படியும் உதவி அதிகாரியின் ஆசைக்கு இணங்க பெண் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். இதனால் அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு அத்துமீறத் தொடங்கிவிட்டார். சார்பதிவாளருக்கு திருமணமாகிவிட்டது தெரிந்தும், இரவில் போன் செய்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
இதனால் தனது மேல் அதிகாரி செய்யும் டார்ச்சர் குறித்து கணவரிடம் புகார் தெரிவித்தார். கணவரும், இதுபோன்ற அதிகாரிகளை சும்மா விடக்கூடாது என்று பெண் சார்பதிவாளருக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், தைரியமாக தனது மேல் அதிகாரி மீது பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பென்ராஜிடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து விசாகா கமிட்டிக்கு அவரது புகார் அனுப்பப்பட்டுள்ளது.
பதிவுத்துறையில் உள்ள விசாகா கமிட்டி, இந்த பாலியல் புகார் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் புகாருக்குள்ளான அதிகாரி சேலத்தில் இருந்து ஜவுளிக்கு பேர் போன ஊருக்கு மாற்றப்பட்டார். ஆனாலும், இந்த பாலியல் புகார் பதிவுத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாகா கமிட்டி இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, போலீசிலும் புகார் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு பெண் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.