50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பதிவுதபால் முறையை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னை: 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் பதிவுதபால் முறையை நீக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சல் துறையில் நடைமுறையில் இருந்து வரும் பதிவுத் தபால் முறையை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அஞ்சல் துறை நிறுத்தப்போவதாக வந்துள்ள அறிவிப்பு கவலைக்குரியது. ஸ்பீடு போஸ்ட் மட்டுமே செயலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பதிவு தபால்களின் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய அஞ்சல் துறை சொல்கிறது. பதிவு கடிதங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.24 ஸ்பீடு போஸ்ட் கடிதங்களுக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.35 அதிலும் கடிதங்களின் எடை மற்றும் தொலைவு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் இன்னும் இந்த தொகை கூடும். இது தவிர ஒப்புகை தகவலைப் பெற இன்னும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். எளிய மக்கள் நம்பகத்தன்மையோடு பயன்படுத்தி வந்த இந்த சேவையை அஞ்சல்துறை நிறுத்தாமல் தொடர வேண்டும்.
அஞ்சலக ஏடிஎம் அட்டையிலிருந்து பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் அஞ்சல் துறையில் சேமித்து வைக்கும் நுகர்வோர்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அஞ்சல் துறை என்பது வெறும் வருவாய் கருத்தில் கொண்டு செயல்படும் துறையாகக் கடந்த காலங்களில் செயல்படவில்லை. மக்களின் சேவையை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த துறை வருமானத்தை நோக்கி நகர்வது சரியான வழிமுறை அல்ல. அஞ்சல் துறையில் நிலவும் குறைபாடுகளை கலைந்து மக்களுக்கு உரிய சேவையை வழங்க ஒன்றிய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.