பல பகுதிகளில் சிவப்பு மண்டல எச்சரிக்கை; தீபாவளி பட்டாசு புகையால் திணறியது தலைநகர் டெல்லி: காற்றின் தரம் ‘மிக மோசம்’
புதுடெல்லி: தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டுவது தொடர்கதையாகி வருகிறது. அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளாலும் ஏற்படும் புகைமண்டலம், குளிர்காலப் பனியுடன் சேர்ந்து தலைநகரை முற்றுகையிடுவது வாடிக்கையாக உள்ளது.
இதைக் கட்டுப்படுத்த நீதிமன்றங்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதும், காற்று தர மேலாண்மை ஆணையம் ‘தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை’ செயல்படுத்துவதும் வழக்கமான நடவடிக்கைகளாகும். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாகவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டத்தை ஆணையம் அமல்படுத்தியிருந்தது.
இருப்பினும், நீதிமன்றத் தடைகளையும் மீறி, நேற்று தீபாவளி இரவில் டெல்லி முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதன் விளைவாக, தலைநகரின் காற்றின் தரம் கடுமையாகச் சரிந்தது. டெல்லியில் உள்ள 38 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில், 34 மையங்கள் ‘சிவப்பு மண்டல’ அளவைப் பதிவு செய்தன. நகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 326 ஆக இருந்த நிலையில், நேற்று அது 345 ஆக அதிகரித்து ‘மிக மோசம்’ என்ற பிரிவில் நீடித்தது.
துவாரகா (417), அசோக் விஹார் (404), வஜிர்பூர் (423), ஆனந்த் விஹார் (404) உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் 400-ஐத் தாண்டி ‘கடுமையான அபாயகரமான’ நிலையை எட்டியது. தீபாவளிக்கு பிந்தைய தினங்களான இன்றும், நாளையும் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து கடுமையான பிரிவை எட்டக்கூடும் என அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.