பெர்லின்: அமெரிக்கா எச்-1பி விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், திறமையான இந்தியர்களுக்கு ஜெர்மனி சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்-1பி விசா விண்ணப்பங்களுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தது, அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தத் தயங்குவதால், இந்தியர்களின் அமெரிக்க கனவு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த சூழலைப் பயன்படுத்தி, திறமையான இந்தியப் பணியாளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஜெர்மனி தீவிரமாக இறங்கியுள்ளது.
இதுகுறித்து இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மன் கூறுகையில், ‘ஜெர்மனியில் நிலையான குடியேற்றக் கொள்கைகள் உள்ளது. தகவல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் இந்தியர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியர்களுக்கான வருடாந்திர விசாக்களின் எண்ணிக்கையை 90,000 ஆக ஜெர்மனி உயர்த்தியுள்ளது. விசாவுக்கான காத்திருப்பு காலத்தையும் இரண்டு வாரங்களாக குறைத்துள்ளது. மேலும், சிறந்த பணிச்சூழல், நிரந்தரக் குடியுரிமைக்கான எளிய வழிமுறைகள் போன்ற காரணங்களால், அமெரிக்காவுக்கு மாற்றாக ஜெர்மனி தற்போது இந்தியர்களின் புதிய தேர்வாக உருவெடுத்துள்ளது’ என்று கூறினார்.