ஈரோடு: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் இன்று துவங்கியது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்-ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான முகாம், ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை துவங்கியது. முகாமை மாவட்ட கலெக்டர் கந்தசாமி துவங்கி வைத்தார். கர்னல் அன்சுல் வர்மா, சுனில் யாதவ், ராஜட் ஸ்வர்ணா ஆகியோர் கண்காணிப்பில் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
துவக்க விழாவில், சென்னை மண்டலம் துணை இயக்குநர் (பொது) அஸ்வதி கலந்துகொண்டார். முகாமையொட்டி, வஉசி பூங்கா விளையாட்டு மைதான சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. போலீசாரும், ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முகாம் வருகிற 7ம் தேதி வரை நடக்கிறது. “இந்த ஆட்சேர்ப்பு முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது என்பதால் விண்ணப்பதாரர்கள் மோசடி செய்யும் ஏஜெண்ட்டுகளிடம் ஏமாற வேண்டாம்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன.