Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

₹30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவை ரூ.30 கோடி செலவில் புனரமைத்து ‘கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ‘கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா’-வை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு-2024 அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தின் இயற்கை சூழலை பாதுகாத்திடவும், வனப்பரப்பை அதிகப்படுத்தும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கை பூங்காவாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கிண்டி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு ரூ.30 கோடி செலவில் சிறுவர்களுக்கு இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அப்போது, வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன வாகனங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில்,அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், மதிவேந்தன், சென்னை மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, பிரபாகர ராஜா எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார், இயக்குநர் ராகுல் நாத், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) சுதான்சு குப்தா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் னிவாஸ் ஆர். ரெட்டி மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.