Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க முடியாது: டிடிவி தினகரன் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை என்னை சந்தித்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

என்டிஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதனால் கூட்டணியில் இருந்து வெளியில் வந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை. 2021ம் ஆண்டு தேர்தலின் போது, எனக்கு துரோகம் செய்த பழனிசாமி என்னை சந்திக்க எவ்வாறு அவருக்கு தைரியம் வரும், தயக்கம் இருக்கும். அதிமுகவின் பொதுச்செயலாளராக அவர் இருக்கும் வரை எங்களுடன் கூட்டணிக்கு வர வாய்ப்பு இல்லை.

எங்கள் நலம் விரும்பிகள் மற்றும் டெல்லியில் இருக்கும் சிலர் அம்மா கட்சி மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் வர வேண்டும் என தெரிவித்தார்கள். எனக்கு தெரியும் இது நடக்காது என்று. இருப்பினும் முயற்சி செய்யுங்கள் என்று சொன்னேன். பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் அந்த கூட்டணியில் இருக்கமாட்டேன் என எழுதி கொடுத்து உள்ளேன்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை என்று கூறுவார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி என்னும் துரோகியை என்றும் நண்பராக ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் திமுகவிற்கு வைகோ செல்கிறார் அது போல அமமுக செல்லும் என சிலர் கூறுகிறார்கள் எங்களால் பதவிக்கு வந்தவர், எங்களால் ஆட்சிக்கு வந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எங்களால் காப்பாற்றப்பட்ட ஆட்சி. அந்த ஆட்சியில் முதல்வர் ஆக்கப்பட்டவர் எங்களை கட்சியிலிருந்து வெளியேற்றிய நிகழ்வுக்கும், மதிமுக வைகோவின் நிகழ்வுக்கும் பொருந்தாது.

18 உறுப்பினர்கள் இல்லை என்றால் ஆட்சி அமைத்து இருக்க முடியுமா? ஓ பன்னீர் செல்வம் உடன் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிராக இருந்த போது இந்த 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு செலுத்தாமல் இருந்து இருந்தால் ஆட்சி அமைத்து இருக்க முடியுமா? அதிமுக என்ற ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் எடப்பாடி நன்றி இல்லாதவர், ஆட்சியை காப்பாற்றி கொடுத்த எங்களுக்கு அவர் துரோகம் செய்து விட்டார்.

நயினார் நாகேந்திரன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அமித்ஷா சொல்லாததை நயினார் நாகேந்திரன் சொல்லிகொண்டு இருக்கிறார். தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு தான் இறுதியானது என சொல்கிறார். அவர் எடுக்கும் முடிவை எல்லாமல் கேட்டுகொண்டு இருக்க வேண்டும் என எங்களுக்கு தலை எழுத்தா?

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக தற்போது இல்லை. அதில் பல்வேறு விதிமுறைகள் இருந்தது. அதை அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி மாற்றி விட்டார். தற்போது இருப்பது எடப்பாடி திராவிட முன்னேற்ற கழகம் தான். 2026 தேர்தலுக்கு மீண்டும் அதிமுக புத்துயிர் பெற பழைய சட்டத்திட்டத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றிய சட்டத்திட்ட கொண்டு வந்து பழைய அதிமுகவை உருவாக்குவதற்கு அமமுக உறுதியாக துணை நிற்கும். 2026ம் தேர்தலில் அமமுக இடம் பெற்று இருக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும்.

* டிடிவி.தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அப்போதுதான் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவரது அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளையும், அதே போன்று அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 13 பேரின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதனையடுத்து அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு நேற்று மதியம் வந்த செங்கோட்டையன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.