Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெற்று தந்த பெருமை

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாத மாநிலங்களில் கவர்னர்களை கைப்பாவையாக வைத்து அத்துமீறலில் ஈடுபடுவது ஒன்றிய பாஜ அரசின் சர்ச்சைக்குரிய வாடிக்கைகளில் மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் மற்றும் மேலும் சில மாநிலங்களிலும் இந்த அடாவடி தொடர்கிறது. சமூக மேம்பாட்டின் மீது பெரும் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கவர்னர்களின் அத்துமீறலுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழகத்திலும் மக்கள் மேம்பாடு சார்ந்த பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் அலட்சியத்தின் உச்சத்தில் இருந்தார் இங்கு பொறுப்பு வகிக்கும் கவர்னர். இப்படிப்பட்ட நிலையில் இந்த பூனைக்கு மணிகட்டுவது யார்? என்ற ரீதியில் கவர்னர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களும் தவித்து நின்றது. ஆனால் சமூகநீதியை மையமாக கொண்டு செயல்படும் தமிழ்நிலமானது சட்டத்தின் கதவுகளை கம்பீரமாக தட்டியது.

கவர்னரின் அலட்சியத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பானது, ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும் தமிழகத்தின் பக்கம் திருப்பியது.  ‘‘மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதா கிடைத்ததும், அதற்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். ஒரு மசோதாவில் மாற்றம் கொண்டு வந்து பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் கவர்னர் அதனை நிராகரிக்க முடியாது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் மாற்றங்கள் செய்யாவிட்டால் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க கூடாது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே கவர்னருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. குடியரசுத் தலைவருக்கு இருப்பது போல், மசோதாவை கிடப்பில் வைப்பதற்கும், நிராகரிப்பதற்குமான வீட்டோ அதிகாரம் கவர்னருக்கு இல்லை. கவர்னர் என்பவர் அரசியல் பின்புலங்களால் வழிநடத்தப்படக்கூடாது. ஆளும் அரசுக்கு ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். பிரச்னைகளை தீர்ப்பதில் கவர்னர் முன்னோடியாக இருக்க வேண்டும். விரைவாக செயல்பட வேண்டும்.

தடைக்கல்லாக இருக்க கூடாது. அரசியல் சாசன மதிப்பை கவர்னர் போற்றி பாதுகாக்க வேண்டும்,’’ என்று தீர்ப்பால் சம்மட்டி அடி கொடுத்தது. தமிழகத்தை போன்று, மசோதாக்களை கிடப்பில் போடும் கேரள கவர்னருக்கு எதிரான 2 ரிட் மனுக்களை அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ‘மசோதா தொடர்பான வழக்கில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

அதற்குரிய தீர்ப்பை நீதிமன்றம் வழங்கிவிட்டது. அது எங்களுக்கும் பொருந்தும். எனவே ரிட் மனுக்களை வாபஸ் பெறுகிறோம்’’ என்றார். இதற்கு ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்திற்கு வழங்கிய தீர்ப்பு கேரளத்திற்கு பொருந்தாது என்று வாதிட்டார்.

ஆனால் நீதிபதிகள், ‘‘மசோதா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய தீர்ப்பை வைத்து தான், கேரள அரசு மனுக்களை திரும்ப பெற அனுமதி கேட்கிறது. அதற்கு எப்படி தடை விதிக்க முடியும்? என்று குட்டு வைத்து ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. மொத்தத்தில் கவர்னர்களின் அத்துமீறலில் சிக்கியுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நீதியை பெற்று தந்த பெருமை தமிழ்நாட்டிற்கே உரியது என்பது நிதர்சனம்.