*ஐயப்பன் எம்எல்ஏவுக்கு கிராமமக்கள் பாராட்டு
ரெட்டிச்சாவடி : கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரணப்பட்டு ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் ஐயப்பன் எம்எல்ஏவிடம் இலவச மனை பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு கே.வி.எஸ். ராமலிங்கம், ரகுபதி மற்றும் பிரகாஷ் ஆகியோர்களிடம் ஐயப்பன் எம்எல்ஏ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது சுமார் 3 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிட நிலத்திற்கு அரசு விலையில் பணம் பெற்றுக்கொண்டு ஒப்படைத்தனர். இதை அறிந்த காரணப்பட்டு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஐயப்பன் எம்எல்ஏவை சந்தித்து, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு தொடர்ந்து மனு அளித்து வந்தோம்.
தற்போது நீங்கள் வீட்டுமனை பட்டா எங்களுக்கு கிடைக்க வேண்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம், என்றனர். அப்போது ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.