தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் அன்புச்சோலை மையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவனிடம், அங்கு வந்த முதியவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் 2025-2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் 25 அன்புச்சோலை மையங்கள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, சென்னை ராயபுரம், பெருங்குடி, விருகம்பாக்கம் உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் 25 இடங்களில் அன்புச்சோலை மையங்களை காணொளி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர், மையங்களை ஆய்வு செய்து அங்குள்ள முதியோர்களிடம் நலம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், இந்த திட்டம் மூலம் நாங்கள் நலமுடன் இருக்கிறோம், இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு, சமூக நலன், மகளிர் உரிமை துறை மற்றும் நம் தேசம் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் அன்புச்சோலை மையம், காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டு மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இங்கு தினசரி 50க்கும் மேற்பட்ட முதியோர் வருகின்றனர்.
இங்கு வரும் முதியோர்களுக்கு அன்பும் பாசமும் நிறைந்த வீட்டு சூழல் ஏற்படுகிறது, இவர்களின் உடல் நலன், மன நலனை மேம்படுத்துவதற்காக வழக்கமான செயல்பாடு மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. காலை சிற்றுண்டி, மதியம் சத்தான உணவு வழங்குவதோடு பொழுதுபோக்கிற்காக கேரம், செஸ், பகடை காய் உள்ளிட்ட விளையாட்டுகள் சொல்லி தருவதோடு விளையாட வைக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
அன்புச்சோலை மைய முதியோர்கள் கூறுகையில், “தங்கள் பிள்ளைகளால் பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததோடு மனஅழுத்தத்தில் சிரமப்பட்டோம். முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட அன்புச்சோலை மையத்துக்கு வருவதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளோம். சத்தான உணவு வழங்குவதோடு விளையாட்டுகளை சொல்லித்தந்து சந்தோஷமாக பராமரிப்பதோடு மருத்துவ பரி சோதனைகளும் செய்து மருந்து, மாத்திரைகளும் வழங்குகின்றனர். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளோம். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.
