ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்(48), பைனான்சியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அவினேஷ்(28). இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி சுதாகரை அவினேஷ் சரமாரியாக வெட்டி உள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் அவினேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு அவினேஷ் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த 8 நாட்களாக ரத்தினகிரி காவல் நிலையத்தில் அவினேஷ் கையெழுத்து போட்டு வந்துள்ளார். இதேபோல் நேற்று அவினேஷ் கையெழுத்து போடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து பஸ்சில் வந்து ரத்தினகிரி மேம்பாலம் அருகில் இறங்கி கோயில் பிரதான வளைவு வழியாக காவல் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
இவர் தினமும் கையெழுத்து போடுவதற்கு ரத்தினகிரி வருவதை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல், நேற்று அவினேஷை ஓடஓட சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து உயிரிழந்தார். தொடர்ந்து அந்த 5 பேரும் கத்திகளுடன் ரத்தினகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.