ரேஷன் அரிசியை கடத்தி விற்க விவசாயியை கட்டாயப்படுத்தினர் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் 2 எஸ்ஐ, பெண் ஏட்டு அதிரடி கைது: வலைவிரித்து பிடித்தது விஜிலென்ஸ்
சேலம்: ரேஷன் அரிசியை கடத்தி விற்க விவசாயியை கட்டாயப்படுத்தி ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.க்கள், பெண் ஏட்டு ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கடந்த மாதம் ரேஷன் அரிசியுடன் சக்திவேலை கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் விவசாயி சக்திவேல், சேலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் போலீசார் என்னை கைது செய்தனர்.
இதன்பிறகு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்வதை விட்டு விட்டேன். ஆனால் இன்ஸ்பெக்டர் ராமராஜன், 2 எஸ்.ஐக்கள் ஆகியோர், மீண்டும் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யுமாறு நெருக்கடி செய்வதுடன், மாதம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். முதற்கட்டமாக ரூ.15 ஆயிரத்தை தருமாறு கேட்டு டார்ச்சர் செய்கின்றனர். ஆனால் மீண்டும் ரேஷன் அரிசி விற்பனை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமராஜன், எஸ்.ஐ.க்கள் சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் ரூ.15 ஆயிரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்று விவசாயி சக்திவேல் கேட்டுள்ளார். ஏட்டு ராஜலட்சுமியிடம் கொடுக்குமாறு கூறியதையடுத்து, விவசாயி சக்திவேல் பணத்துடன் சேலம் வந்தார். சீலநாயக்கன்பட்டி பகுதியில் ஏட்டு ராஜலட்சுமியிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏட்டு ராஜலட்சுமியை அதிரடியாக கைது செய்தனர்.
அதேநேரத்தில் போலீஸ் ஸ்டேசனில் இருந்த இன்ஸ்பெக்டர் ராமராஜன், எஸ்.ஐ.க்கள் சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோரையும் இன்னொரு விஜிலென்ஸ் குழுவினர் கைது செய்தனர். சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையில் 4 பேர் கூண்டோடு கைதானதால் ஸ்டேசனுக்கு அதிகாரிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கைதான இன்ஸ்பெக்டர் ராமராஜன் திருச்சியை சேர்ந்தவர். எஸ்.ஐ சரவணனுக்கு சொந்த ஊர் திண்டுக்கல். எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.