திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது மஷ்ஹூர் (48). வீட்டில் வைத்து பேய்களை விரட்டுவது உள்பட மந்திரவாதம் செய்து வந்தார். அவரிடம் மந்திரவாதம் செய்வதற்காக கோழிக்கோடு, மலப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வது வழக்கமாகும். இந்தநிலையில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான ஒரு மாற்றுத்திறனாளி பெண் முகம்மது மஷ்ஹூர் மீது குன்னமங்கலம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், திருமணம் செய்வதாக கூறி முகம்மது மஷ்ஹூர் அவரது வீட்டில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மந்திரவாதி முகம்மது மஷ்ஹூரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே அத்தோளி என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து மிரட்டி 40 பவுன் நகை, ரூ. 7 லட்சம் பணம் பறித்ததாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முகம்மது மஷ்ஹூர் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.