லக்னோ: திருமணமானதை மறைத்து தன்னுடன் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பண மோசடியிலும் ஈடுபட்டதாக நடிகை அளித்த புகாரில் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த மணி மெராஜ், போஜ்புரி மொழியில் நகைச்சுவை காணொளிகளை வெளியிட்டு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் ஆவார். சமூக வலைதளங்களில் ‘வண்ணு தி கிரேட்’ என்ற பெயரில் அறியப்படும் நடிகையான வந்தனா என்பவரும், மணி மெராஜும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மணி மெராஜ் தனக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதை மறைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக வந்தனா, உத்தரப்பிரதேச மாநிலம் கோடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், குறிப்பிட்ட மதத்திற்கு மாறும்படியும் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் கர்ப்பமடைந்தபோது கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகவும், அவரது முதல் திருமணம் குறித்துக் கேட்டபோது குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில், உத்தரப்பிரதேச காவல்துறையினர், பீகார் மாநிலம் பாட்னாவுக்குச் சென்று நேற்று மணி மெராஜை அதிரடியாக கைது செய்தனர். அவரை காசியாபாத்திற்கு அழைத்துச் செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே, மணி மெராஜின் வழக்கறிஞர் சிவானந்த் பாரதி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ‘இது பாலியல் வன்கொடுமை அல்ல; இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் ‘லிவ்-இன்’ உறவில் இருந்தனர். பிரபலமான யூடியூபராக இருப்பதால், அவரது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் சதி வேலையாக இருக்கும்’ என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.