புதுடெல்லி: பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே போதுமானது எனக்கூறி, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. டெல்லியில் கடந்த 2017ம் ஆண்டு, பள்ளிக்கு அருகே மரவேலை செய்யும் பட்டறையில் பணியாற்றி வந்த டோனி என்பவர், பத்து வயது சிறுமிக்கு உணவுப் பொருட்களைக் காட்டி ஆசைவார்த்தை கூறி, தனது கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும், இந்தச் சம்பவத்தை வெளியில் கூறினால், ‘சாக்கடையில் தள்ளி மூழ்கடித்துவிடுவேன் அல்லது மரக்கட்டையைப் போல் வெட்டிப் போட்டுவிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்தனர். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் ஓரி, குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தார். தனது தீர்ப்பில், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் நம்பிக்கையூட்டுவதாகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே ஒரே சாட்சியாக இருந்தாலும், அவரது வாக்குமூலம் நம்பகமானதாக இருந்தால், அதன் அடிப்படையிலேயே தண்டனையை உறுதி செய்ய முடியும்’ என்று நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.