இழப்பீடு என்பது உதவி அல்ல அது பாதிக்கப்பட்டவரின் உரிமை: விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்
ஜெய்ப்பூர்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தொழில்நுட்பக் காரணத்தைக் கூறி இழப்பீடு வழங்க மறுத்த கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், போக்சோ சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சிறுமி தனது பள்ளிக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்திற்கான வருமானச் சான்றிதழை வழங்கவில்லை என்ற தொழில்நுட்பக் காரணத்தைக் கூறி, அவரது இழப்பீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ‘சட்டவிரோதமானது’ எனக் குறிப்பிட்டு அதை ரத்து செய்து உத்தரவிட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இதுபோன்ற வழக்குகளில் மனிதாபிமான மற்றும் பாதிக்கப்பட்டவரை மையமாகக் கொண்ட அணுகுமுறையே தேவை. இழப்பீடு என்பது உதவி அல்ல; அது பாதிக்கப்பட்டவரின் உரிமை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் ஆறுதல்.
நிதிநிலையைத் தணிக்கை செய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக பாலியல் வன்கொடுமையால் ஏற்பட்ட மன உளைச்சலை அடிப்படையாகக் கொண்டே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று கடுமையாகத் தெரிவித்தனர். மேலும், இந்த மனுவை ஆறு வாரங்களுக்குள் மீண்டும் விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி விரைவான தீர்வுக்காக மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தையும் அணுகலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
