கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் இடையிலான 4 நாள் போட்டி கடந்த 1ம் தேதி துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் முதல் இன்னிங்சை ஆடிய விதர்பா அணி, அட்டகாசமாக 501 ரன்கள் குவித்தது. அந்த அணியின் யாஷ் ரத்தோட் அற்புதமான ஆட்டத்தை அரங்கேற்றி 133 ரன் குவித்தார். அதன் மூலம், அந்த அணி 210 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின் 2வது இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு அணி 3ம் நாளான நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், கடைசி நாளான நேற்று, தமிழ்நாடு அணி 2ம் இன்னிங்சை தொடர்ந்தது. துவக்க வீரர் ஆதிஷ் 46 ரன்னிலும், மற்றொரு துவக்க வீரர் விமல் குமார் 9 ரன்னிலும் அவுட்டாகினர். பின் வந்தோரில் பாபா இந்திரஜித் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 77 ரன் எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனால், இப்போட்டி டிராவில் முடிந்தது.
