விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை எலைட் குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. முதலில் ஆடிய தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 182 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆந்திரா, 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தமிழகத்தின் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ், கேப்டன் சாய் கிஷோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
அதையடுத்து, தமிழ்நாடு அணி 2வது இன்னிங்சை, 2ம் நாளான நேற்று ஆடியது. துவக்க வீரர்கள் விமல் குமார் 20, ஜெகதீசன் ரன் எடுக்காமல் அவுட்டாகினர். பின் வந்த பாலசுப்ரமணியம் சச்சின் 51 ரன் எடுத்து ரன் அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து 107 ரன்னுடன் முன்னிலையில் உள்ளது. பிரதோஷ் ரஞ்சன் பால் 26, சாய் கிஷோர் ரன் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

