கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று, தமிழ்நாடு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜார்க்கண்ட் அணி, ஒரு இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், எலைட் குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகள் மோதிய போட்டி, கோவையில் கடந்த 15ம் தேதி முதல் நடந்தது. முதலில் ஆட்டத்தை துவக்கிய ஜார்க்கண்ட் அணி, கேப்டன் இஷான் கிஷணின் (173 ரன்) அதிரடியால் 419 ரன்கள் குவித்தது.
தமிழ்நாடு தரப்பில் குர்ஜப்நீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார். அதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு அணி வீரர்கள், ஜார்க்கண்ட் அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசியில் 93 ரன்னுக்கு அவர்கள் ஆல் அவுட் ஆகினர். அதனால் பாலோஆன் பெற்ற தமிழ்நாடு அணி, 3ம் நாளின் பிற்பகுதியில் 2ம் இன்னிங்சை துவக்கியது.
3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு 3 விக்கெட் இழந்து, 52 ரன் எடுத்திருந்தது. ஆந்த்ரே சித்தார்த் 3, ஜகநாதன் ஹேம்சுதேஷன் 3 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில், கடைசி நாளான நேற்று தமிழ்நாடு 2வது இன்னிங்சை துவக்கியது. ஆந்த்ரே சித்தார்த் மட்டும் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 79 ஓவரில் தமிழ்நாடு 212 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதனால், ஜார்க்கண்ட் அணி ஒரு இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக இஷான் கிஷண் தேர்வு செய்யப்பட்டார்.